தற்போது 48 வயதாகும் நடிகர் விஷாலுக்கு, தனது நீண்ட நாள் காதலியான நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று காலை சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அண்ணாநகரில் உள்ள விஷாலின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்தத்தில், இருவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
அண்மையில் நடந்த, சாய் தன்ஷிகா நடித்த யோகிடா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஷால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது திடீரென தன்ஷிகா உடனான காதலை மேடையில் போட்டு உடைத்தார். மேலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று அவருக்குப் பிறந்தநாள். இந்நாளில் திருமணம் நடைபெறும் என்று அன்றே கூறியிருந்தார் விஷால்.
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்றும் விஷால் கூறியுள்ளார். எனவே இரண்டு மாதங்களில் அங்கு வைத்துதான் எனது திருமணம் நடைபெறும் என்று விஷால் தெரிவித்துள்ளார். அதற்காக, சங்கத்தின் பொருளாளரும் நடிகருமான கார்த்தியிடம், சங்கத்தின் திருமண மண்டபத்தைக் கூட முன்பதிவு செய்துவிட்டதாக விஷால் கூறியிருக்கிறார்.
எத்தனையோ ஆண்டுகள் பொறுத்துவிட்டோம்; இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க மாட்டோமா என்றதற்கு, சாய் தன்ஷிகாவும் சரி என்று கூறிவிட்டார் – விஷால்
தற்போது 48 வயதாகும் விஷால், தஞ்சாவூரைச் சேர்ந்த 35 வயதாகும் நடிகை சாய்தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார். இவர்கள் இருவரும் 15 ஆண்டுகால நண்பர்கள்; இதில்தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் அவர்களது இரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
விஷால், தனது இரசிகர்களால் புரட்சித் தளபதி என்று கொண்டாடப்படுகிறார். செல்லமே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக, சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, அவன் இவன் என, தொடர் ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய இரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது, மகுடம் என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார்.
விஷால் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருப்பவர். இவரின் முன்னெடுப்பால்தான் தென்னிந்திய திரைப்படச் சங்கக் கட்டடமே கட்டப்படுகிறது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இந்தக் கட்டுமானப் பணி நடக்கிறது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் தனக்கு திருமணம் என்று அப்போதே கூறியிருந்தார் விஷால். அதனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார். அவரை நாமும் வாழ்த்துவோமே..!
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.