வாஷிங்டன்:
இன்று நள்ளிரவு முதல் பல கோடி டாலர்கள் வரியாக அமெரிக்காவுக்கு கொட்டப்போகிறது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் வரை 25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி, பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள பிரேசிலுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். வேறு பல நாடுகளுக்கும் இப்படி தாறுமாறாக வரிகளை விதித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 07) சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
* இன்று நள்ளிரவு முதல் பல கோடி டாலர்கள் வரியாக அமெரிக்காவுக்கு கொட்டப்போகிறது.
* அமெரிக்காவை சிரித்து கொண்டே பல்லாண்டுகளாக பயன்படுத்தி கொண்ட நாடுகளிடம் இருந்து பல கோடி டாலர்கள் வரியாக வந்து கொட்டப் போகின்றன.
* இதை அமெரிக்கா தோற்று போக வேண்டும் என்று நினைக்கும் தீவிர இடதுசாரி நீதிமன்றங்களால் மட்டுமே தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியில், 25 சதவீதம் மட்டுமே இன்று அமலுக்கு வருகிறது. இன்னொரு 25 சதவீதம் இம்மாத கடைசியில் அமலுக்கு வருகிறது.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.