சென்னை:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு, நீதிபதிகள் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை, செய்தி ஊடகங்கள் வாயிலாக, சரியான நேரத்தில், பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோரை, அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தார். மனுவில், ‘முறையாக அரசாணை பிறப்பித்து, அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, செய்தி தொடர்பாளர்களாக நியமித்தது, சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல.
இந்த நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 07) தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதம்” என மனுதாரர் வாதத்தை முன் வைத்தார்.
பின்னர் நீதிபதிகள், ”ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை” என தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு, நீதிபதிகள் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர்.
Discover more from செய்தி இதழ்
Subscribe to get the latest posts sent to your email.